Thursday, 12 April 2012

Dr. அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள்


இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்ட Dr. அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் 14.04.2012 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

அகில இந்திய அஞ்சல்  ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்
Dr. அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது  


பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.
           Dr. அம்பேத்கர் அவர்களின் பொன் மொழிகள்
  • ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.
  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
  • எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
  • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
  • சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
  • உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
  • சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
  • முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.