Tuesday, 29 November 2011

CIRCLE UNION NEWS

25.11.11 MARCH TO PARLIAMENT - A GRAND SUCCESS


 பாராளுமன்றம்  நோக்கி  வரலாற்றுப் பேரணி - மகத்தான வெற்றி !

கடந்த 25.11.2011  அன்று பாராளுமன்றம் அருகில் உள்ள புது டெல்லி  ஜந்தர் மந்தர் பகுதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது காலையில் இருந்தே  நாடெங்கிலும்  இருந்து பல்லாயிரக் கணக்கான மத்திய , மாநில , BSNL   உள்ளிட்ட பல்வேறு  பொது துறை , ரயில்வே , பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி , பள்ளி  ஆசிரியர்கள் , அவரவர்கள் சங்கப் பதாகைகளுடன் உரத்த கோஷங்கள்  இட்டவாறே கூட ஆரம்பித்தனர். காலை 10.00 மணியளவில் தலைவர்கள் மேடைக்கு வந்ததும்  விண்ணதிரும்  கோஷங்களால்  அந்தப் பகுதியே கிடு கிடுத்தது . காலை 10.30  மணியளவில் அந்தப் பகுதியே மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்தது.   

அனைத்து பகுதி ஊழியர் சங்கங்களில் இருந்தும் பிரதம மந்திரியிடம் நேரில் அளித்திட  வேண்டி PFRDA BILL  க்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கையெழுத்து பிரதிகளை  மூட்டை மூட்டையாக எடுத்து வந்து மேடைப் பகுதியை நிறைத்தனர். அந்தப் பேரணியில் நமது சம்மேளன மாபொதுச் செயலர் தோழர்.  M. கிருஷ்ணன் உள்ளிட்ட  பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற  உறுப்பினர்கள் பேரணியை வாழ்த்தி உரையாற்றினர். 

தமிழக அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தில் இருந்து மாநிலச் செயலர்  தோழர் .
J.R , அகில இந்திய உதவிப் பொதுச் செயலரும் மாநிலப் பொருளருமான தோழர். A. வீரமணி, மாநிலச் சங்க நிர்வாகிகள்  தோழர் T. நேதாஜி சுபாஷ் ,  தோழர். K.  நாராயணன் , தோழர். A. மனோகரன் ,  தோழர். N.V. மோகன் ராஜ் ,  தோழர். R. குமார் மற்றும்  மாநில மகிளா கமிட்டி கன்வீனர் தோழியர். 
R. மணிமேகலை    ஆகியோர் தலைமையில்  பல்வேறு கோட்டங்களில்   இருந்து  ஏராளமான  தோழர்களும் தோழியர்களும் பேரணியில் கலந்துகொண்டு மாநிலச் சங்கப் பதாகை முன்னிறுத்தி விண்ணதிர கோஷமிட்டனர். 

தமிழகத்திலிருந்து அண்ணா சாலை ,வட சென்னை,  தென் சென்னை,  தாம்பரம், அம்பத்தூர் ,  காஞ்சிபுரம் , வேலூர் , நாமக்கல் , சேலம் கிழக்கு , ஈரோடு, ஊட்டி , தென்காசி , மதுரை , திண்டுக்கல்,  புதுக்கோட்டை, கும்பகோணம் , மயிலாடுதுறை , பாபநாசம் , விருத்தாசலம்  உள்ளிட்ட கிளைகளில் இருந்து 150 க்கும்  மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தது தமிழக அஞ்சல் மூன்றுக்கு பெருமை சேர்த்தது . 

வட சென்னை கோட்டச் செயலர்  தோழர். செல்வம் அவர்கள்  கிட்டத்தட்ட 2000 க்கும் அதிகமான பேரிடம் பெற்ற  கையெழுத்து  இயக்க மகஜரை பேரணி துவக்கத்தில் மாநிலச் செயலரிடம் அளிக்க,அதை மாநிலச் செயலர் ,   நம் மா பொதுச் செயலர் தோழர் கிருஷ்ணன் அவர்களிடம்  அளித்தார்  என்பது குறிப்பிடத் தகுந்தது ஆகும்.    

 தமிழகத்தில் இருந்து வந்திருந்த அஞ்சல் மூன்று தோழர்களுக்கு அவர்கள் தங்கிட வசதியாக , நமது அகில இந்திய சங்க அலுவலகத்தின் அருகில் , சாதிப்பூர்  மெட்ரோ ரயில் நிலையம் எதிரே  தனியாக இரண்டு நாட்களுக்கு ஒரு மண்டபம்  நமது பொதுச் செயலர் தோழர் KVS  அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, நமது தோழர்களுக்கு  மிகுந்த உதவியாக இருந்தது.  நமது பொதுச் செயலர் அவர்களுக்கு  நம்  மாநிலச்  சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி .

பேரணியின் முடிவில்   மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின்  கன்வீனர்  தோழர் S.K. வியாஸ் தலைமையில் ரயில்வே , பாதுகாப்பு, BSNL   உள்ளிட்ட 7  உறுப்பினர்   அடங்கிய  குழு  தோழர். பாசுதேவ் ஆச்சார்யா M.P.,  தோழர் தபன் சென்  M.P. ஆகியோருடன் சென்று  பாரதப் பிரதமர் மாண்புமிகு மன் மோகன் சிங் அவர்களை சந்தித்தது.  பிரதம அமைச்சரிடம்  பென்ஷன் திட்டத்தை தனியார் வசம் விடுவதையும் , PFRDA BILL  பாராளுமன்றத்தில் கொண்டு வருவதையும் கைவிடவேண்டும் என்று கோரி  பல லட்சம் ஊழியரின் கையெழுத்து அடங்கிய மகஜரின் நகலையும் அவரிடம் ஒப்படைத்தது .  அந்த 
மகஜரின் நகலை கீழே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 

2004 ஆம் ஆண்டு முதல் நாம் நடத்திவரும்  தொடர் போராட்டங்களால் தான் 2011 வரை  கூட  மத்திய அரசால் புதிய பென்ஷன் திட்டத்தை சட்டமாக்கிட பாராளு மன்றத்தில்  ஒப்புதல் பெற முடியவில்லை என்பது உண்மை ஆகும் . நம்  பணி  தொடரும் .  போராட்டமும் தான் . தொழிற்  சங்க வரலாற்றில்  இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை .
ஒன்று படுவோம் !                                            போராடுவோம் ! 
போராடுவோம் !                                                வெற்றி பெறுவோம் !      
வெற்றி             பெறும்வரை                      போராடுவோம். !!                                                   
இறுதி வெற்றி நமதே !!!